ஹரியானா மாநிலம் அம்பாலாவில், சமூக வலைதளங்கள் மூலம் “ஹனிட்ராப்” செய்து ஏமாற்றி, இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டின் பேரில் 31 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்கா கிராமத்தைச் சேர்ந்த சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை அம்பாலா கண்டோன்மென்ட் பேருந்து நிலையம் அருகே போலீஸார் பிடித்தனர்.
சமூக வலைதளங்களில் சிக்கிய ஹனிட்ராப்
போலீஸ் விசாரணையில், கடந்த 6–7 மாதங்களாக சுனில் பாகிஸ்தான் நபர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. போலி பெண் ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவரை முதலில் நெருங்கி, நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் உணர்ச்சிப் பூர்வமாகவும் மிரட்டல்களாலும் வலையில் வீழ்த்தியதாக போலீஸ் தெரிவித்தது.
விமானப்படை நிலையத்தில் வேலை
சுனில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். அந்த வேலையின் காரணமாக அவருக்கு அம்பாலா விமானப்படை நிலையத்திற்குள் செல்லும் அனுமதி இருந்தது. அந்த அணுகலை பயன்படுத்தி, ராணுவ முகாம்களின் இருப்பிடம், படைகள் நகர்த்தப்படும் இடங்கள், படை நிலைமை தொடர்பான விவரங்கள் போன்ற ரகசிய தகவல்களை அவர் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாட்ஸ்அப் சாட், குரல் அழைப்புகள் மீட்பு
போலீஸார் சுனிலின் கைபேசியிலிருந்து பாகிஸ்தான் நபர்களுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல்கள், குரல் அழைப்புகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். மேலும், அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்றும் விசாரிக்கின்றனர்.
4 நாட்கள் காவல் விசாரணை
அம்பாலா குற்றப்பிரிவு டிஎஸ்பி வீரேந்தர் குமார் பேசிய போது “சுனிலை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது வேறு நபர்களும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் மேலும் தகவல்கள் வெளியாகும்,” என்றார்.
ISI நடத்திய ஹனிட்ராப் என சந்தேகம்
இந்த ஹனிட்ராப் செயலை பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ISI திட்டமிட்டு நடத்தியதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். போலி ஆன்லைன் அடையாளம் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் பணம் மற்றும் உதவி தருவதாக ஆசை காட்டி ராணுவ ரகசியங்களை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் எவ்வளவு முக்கிய தகவல்கள் வெளியேறியுள்ளன என்பது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.
Read More : ஆதார் வைத்திருப்பவர்களுக்கு 10 கிராம் தங்கம் இலவசமா? மத்திய அரசின் புதிய திட்டம்..? உண்மை என்ன?



