முதலீட்டு சந்தையில் தங்கம் எப்போதுமே ராஜாவாக கருதப்பட்டாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளி நிகழ்த்திய அதிரடி மாற்றங்கள் முதலீட்டாளர்களை மலைக்க வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 29, 2025 அன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் 2.50 லட்சத்தை தாண்டி, ரூ.2,54,174 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
ஆனால், இதே உச்சத்தை தொட்ட சில மணி நேரங்களிலேயே லாபத்தைப் பிரித்தெடுக்கும் (Profit Booking) முயற்சியில் முதலீட்டாளர்கள் ஈடுபட்டதால், ஒரே நாளில் சுமார் ரூ.21,000 சரிந்து ரூ.2,33,120 என்ற நிலைக்கு வந்தது. இத்தகைய கடும் ஏற்ற இறக்கங்கள் வெள்ளிச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
வெள்ளியின் இந்த அசுர வளர்ச்சி முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை அள்ளித் தந்துள்ளதென்றே கூறலாம். கடந்த 2025 ஜனவரி 1-ஆம் தேதி ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு, ஆண்டின் இறுதியில் அதன் மதிப்பு சுமார் ரூ.2.97 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 196 சதவீத லாபமாகும். இத்தகைய விலை உயர்வுக்குப் பின்னால் பல உலகளாவிய காரணங்கள் உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, சூரிய சக்தி பேனல்கள், மின்சார வாகனங்கள் (EV), மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வெள்ளியின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்துடன், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் இடிஎஃப் (ETF) எனப்படும் வர்த்தக நிதி முதலீடுகள் அதிகரித்ததும் வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் உயர காரணமாக அமைந்தன.
வருகின்ற 2026-ஆம் ஆண்டை பொறுத்தவரை, வெள்ளி விலை மேலும் புதிய உச்சங்களை எட்ட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 65 முதல் 80 டாலர்கள் வரை உயரக்கூடும் என்பதால், இந்திய சந்தையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.80 லட்சம் முதல் ரூ.3.20 லட்சம் வரை வர்த்தகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விநியோகப் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்தால் இந்த விலை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
அதே சமயம், 1979-80 காலகட்டத்தில் ஏற்பட்ட உச்சத்திற்குப் பிறகு விலை 60 சதவீதம் வரை சரிந்த வரலாற்றையும் நாம் மறக்க முடியாது. எனவே, தற்போதைய உயர்வுக்குப் பிறகு ஒரு சிறிய விலை சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், 2026-ஆம் ஆண்டில் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புவோர் மிகவும் எச்சரிக்கையுடனும், சரியான உத்தியுடனும் செயல்பட வேண்டும். மொத்தமாக பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்து, ‘எஸ்ஐபி’ (SIP) முறையில் சிறுக சிறுக முதலீடு செய்வதே பாதுகாப்பானது.
சந்தை 8 முதல் 10 சதவீதம் வரை சரியும் நேரங்களில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளலாம். மேலும், இடர்களைத் தவிர்க்க வெள்ளியுடன் தங்கம் மீதும் முதலீடுகளைப் பிரித்து வைப்பது நல்லது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் வெள்ளி அல்லது வெள்ளி இடிஎஃப் (Silver ETFs) முறைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : அதிசய உணவாகும் பழைய சோறு..!! 200 நோய்களுக்கு ஒரே தீர்வு..!! சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அதிரடி ஆய்வு..!!



