ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனிநபர் அரண்மனை ஒன்று, தற்போது உலக பணக்காரர்களின் விருப்ப தேர்வாக மாறியுள்ளது. அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷிவரஞ்சனி ராஜே என்பவருக்கு சொந்தமானது தான் இந்த அரண்மனை. இவர் ஜோத்பூர் அரசர் இரண்டாம் கஜ் சிங்கின் ஒரே மகள் ஆவார். ஷிவரஞ்சனி தனக்கு சொந்தமான அரச வம்ச சொத்துக்களை லாபகரமானதாக மாற்றி பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது அந்த அரண்மனையை அருங்காட்சியகங்கள் மற்றும் ஹோட்டலாக மாற்றி இவர் வெற்றி பெற்றுள்ளார். இவற்றின் மூலம் அரச குடும்பத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளார் ஷிவரஞ்சனி. இவர், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். பின்னர், நியூயார்க் நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பில் ஒரு பட்டயப் படிப்பை முடித்தார்.
இந்நிலையில், ஷிவரஞ்சனிக்கு சொந்தமான உமைத் பவன் அரண்மனை, தற்போது உலக அளவில் பிரபலமாகி விட்டது. இதனை இவர் ஹோட்டலாக மாற்றிய நிலையில், 2018ஆம் ஆண்டில் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள உமைத் பவன் எனும் அரண்மனை திருமணம் மற்றும் விழாக்களை நடத்த பணக்காரர்களின் தேர்வாக உள்ளது. இந்த அரண்மனையில் உள்ள 347 அறைகளில், ஷிவரஞ்சனி தனக்கென ஒரு அறையில் தங்கியுள்ளார்.