இந்தியர்களின் கலாச்சாரத்திலும் சேமிப்பிலும் தங்கம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக உள்ளது. திருமணம் முதல் சிறு விசேஷங்கள் வரை தங்கத்தை வாங்குவதும், பரிசளிப்பதும் நமது மரபாகவே மாறிவிட்டது. ஆனால், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? என்ற கேள்வி எழும்போது, பலருக்கும் அதுகுறித்த தெளிவான சட்ட விதிகள் தெரிவதில்லை. வருமான வரித்துறையின் சோதனையின் போது, முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பறிமுதல் செய்யப்படாமல் இருப்பதற்கான குறிப்பிட்ட வரம்புகளை மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) வகுத்துள்ளது.
சட்டப்படி, ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு உச்சவரம்பு ஏதுமில்லை. ஆனால், நாம் வைத்திருக்கும் தங்கத்திற்கான வருமான ஆதாரம் மிக அவசியம். முறையான ரசீதுகள் அல்லது ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், ஒரு குடும்பத்தில் உள்ள திருமணமான பெண் 500 கிராம் (62.5 சவரன்) வரையிலும், திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலும் நகைகளை வைத்திருக்க அனுமதி உண்டு.
அதேபோல், ஆண்களுக்கு 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, கணவன், மனைவி மற்றும் ஒரு மகள் உள்ள குடும்பத்தில், சுமார் 850 கிராம் வரை தங்கத்தை எவ்வித ஆதாரமும் இன்றி வைத்திருக்க முடியும். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.2 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
இருப்பினும், இந்த வரம்பிற்கு அதிகமாகத் தங்கம் வைத்திருக்கும் போது, அதற்கான வாங்கிய ரசீது அல்லது பரம்பரைச் சொத்தாகப் பெறப்பட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கணக்கில் வராத பணத்தில் தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, வருமான வரி சோதனையின் போது குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லாத வேறு நபர்களின் நகைகள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, சேமிப்பின் ஒரு பகுதியாகத் தங்கத்தை வைத்திருப்பவர்கள், தங்களது வருமானத்திற்கு உட்பட்ட அளவில் நகைகளை வைத்திருப்பதும், அதற்கான ஆவணங்களை பாதுகாப்பதும் தேவையற்ற சட்டச் சிக்கல்களை தவிர்க்க உதவும்.
Read More : ரூ.18 சிகரெட் இனி ரூ.72-க்கு விற்பனை..!! அமலுக்கு வருகிறது புதிய விலை..!! மத்திய அரசு தடாலடி உத்தரவு..!!



