சர்வதேச அரசியல் களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்து இருப்பதை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா மறைமுகமாக உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது இந்தியா மீது கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.
ஏற்கனவே இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவுடனான உறவை முன்னிறுத்தி தற்போது இந்த வரிச் சுமையை அதிரடியாக உயர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சுமார் 500 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார். இது வெறும் வாய்மொழி எச்சரிக்கையாக மட்டுமல்லாமல், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது இந்தியாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி வரி உயர்வை அமல்படுத்துவதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, அடுத்த வாரமே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்க சந்தையை நம்பியிருக்கும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும், தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆனால், 500 சதவீத வரி உயர்வு என்பது சர்வதேச வர்த்தகத்தில் ஒரு பெரிய போராகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த கடுமையான நிலைப்பாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் விரிசலை ஏற்படுத்துமா அல்லது இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்யுமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.
Read More : ரூ.18 சிகரெட் இனி ரூ.72-க்கு விற்பனை..!! அமலுக்கு வருகிறது புதிய விலை..!! மத்திய அரசு தடாலடி உத்தரவு..!!



