தமிழக அரசியல் களத்தில் 2026-ஐ இலக்காக கொண்டு அதிவேகமாக பயணித்து வரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது கடுமையான உட்கட்சி மோதல்களையும், அதிகாரப் போட்டிகளையும் எதிர்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாகியுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே நிலவும் பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கரூரில் ஏற்பட்ட ஒரு விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள், கட்சியின் ஒழுக்கத்தை குலைப்பதாக கருதும் விஜய், அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மோதலுக்குப் பின்னணியில் கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணை மிக முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையையே தவெக எதிர்கொள்ளத் தயார் என்று விஜய் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்த நிலையில், அவருக்கு தெரியாமலேயே ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணை கோரியது விஜய்யைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பனையூர் வட்டாரத் தகவல்களின்படி, சிபிஐ விசாரணை இப்போது கட்சிக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆதவ் அர்ஜுனாவை விஜய் நேரடியாகவே கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது கட்சித் தலைமைக்கும், தேர்தல் மேலாண்மைப் பிரிவுக்கும் இடையே உள்ள விரிசலை உறுதிப்படுத்துகிறது.
மறுபுறம், கட்சியில் நீண்டகாலமாக விஜய்யின் நிழலாக இருந்து வரும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரின் ஆதரவாளர்களிடையே நிலவும் ‘ஈகோ’ யுத்தம் கட்சியை இரண்டு பிரிவுகளாகப் பிளவுபடுத்தியுள்ளது. “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்பது போன்ற விவகாரங்களில் ஆதவ் அர்ஜுனா தன்னிச்சையாக வெளியிடும் கருத்துக்கள், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக அமைவது மூத்த நிர்வாகிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஒருபுறம் விசுவாசிகளின் படை, மறுபுறம் தேர்தல் வியூக வகுப்பாளர்களின் தர்க்கம் எனத் தவெக ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளது.
தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைக்கும் முன்பே இத்தகைய உட்கட்சிப் பூசல்கள் வெளிச்சத்திற்கு வருவது, 2026 வெற்றியைப் பாதிக்குமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. கட்சியின் செல்வாக்கை சிதைக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது விஜய் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்றும், விரைவில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : 2030-இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்..!!



