தூத்துக்குடி மாவட்ட மக்களின் வங்கி தேவைகளை எளிதாக்கும் வகையிலும், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உறுதி செய்யும் வகையிலும் அஞ்சல் துறை அதிரடியான புதிய சேவைகளை தொடங்கியுள்ளது. இது குறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில், அஞ்சலகங்களின் நவீன முகத்தையும், சாமானியர்களுக்கான நிதிச் சேவைகளையும் விரிவாக விளக்கியுள்ளார்.
குறிப்பாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி’ (IPPB) மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விபத்து காப்பீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 700 ரூபாய் பிரீமியத்தில், 10 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுப் பாதுகாப்பை இத்திட்டம் வழங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் இதில் இணைந்துள்ள நிலையில், அண்மையில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஞ்சலகங்களில் எளிய முறையில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்குவதன் மூலம் இத்தகைய காப்பீட்டுப் பலன்களை பொதுமக்கள் பெற முடியும்.
அஞ்சலகங்களின் சேவைகள் இப்போது தபால் விநியோகத்துடன் நின்றுவிடாமல், ஒரே கூரையின் கீழ் பாஸ்போர்ட் விண்ணப்பம், ஆதார் சேவைகள் மற்றும் பிசினஸ் போஸ்ட் என பன்முகத் தன்மையுடன் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 30 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஆதார் அட்டை இருந்தால் போதும், எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் அஞ்சலகங்கள் மூலம் பணம் எடுத்துக்கொள்ளும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சேவையின் சிறப்பம்சமாக, முதியவர்கள் மற்றும் வெளியூர் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டிற்கே வரும் தபால்காரரிடம் ஆதார் எண்ணை வழங்கி, தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கி கிளைகளுக்கு அலைவதைத் தவிர்த்து, அஞ்சல் துறையின் இந்த நடமாடும் வங்கி சேவையைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கண்காணிப்பாளர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More : 2030-இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்..!!



