இந்திய ரயில்வே பயணிகளுக்கான முன்பதிவு விதிமுறைகளில் இன்று முதல் ஒரு அதிரடி மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் அல்லது செயலி வாயிலாக, முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் பெற விரும்பும் பயணிகள் இனி கட்டாயமாக தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், உண்மையான பயணிகளுக்கு தடையின்றி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும் ஆதார் சரிபார்ப்பு முறை நடைமுறையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, ஆதார் இணைக்கப்பட்ட பயனாளர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தின்படி, முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமானால் ஆதார் இணைப்பு என்பது பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதன் மூலம் போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகள் மொத்தமாக முடக்கப்படுவது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இணையதளம் மூலம் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் நேரடியாக சென்று டிக்கெட் பெறுவோருக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அங்கு ஆதார் சரிபார்ப்பு இன்றி பழைய முறைப்படியே டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பவர்கள் மட்டும், கடைசி நேரப் பதற்றத்தை தவிர்க்க இப்போதே தங்களது ஐ.ஆர்.சி.டி.சி சுயவிவரத்தில் ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : பொங்கல் பரிசுத்தொகை ரூ.3,000..!! நாளையே கடைசி..!! வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்..?



