சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் அருகே அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதி என்பவர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியைப் பார்ப்பதற்காக இன்று அதிகாலை ஆதி அங்கு வந்துள்ளார். அவர் அங்கு வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அவரது தோழியின் உறவினர்களான சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோர் ஆதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்திலேயே இரு தரப்பிற்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், ஆதி தப்பியோட முயன்றுள்ளார். எனினும், அந்த 3 பேர் கொண்ட நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், சம்பவம் குறித்துத் தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், உடனடியாக விரைந்து வந்து ஆதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய சூர்யா உள்ளிட்ட மூவரையும் பிடிக்கக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : BIG BREAKING | 3 MLA-க்கள் கட்சியில் இருந்து நீக்கம்..!! பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!



