தமிழகத்தில் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு அதிரடித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் தோழி விடுதிகள் போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது விளிம்புநிலை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மற்றுமொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் ஆதரவற்ற பெண்கள் சுய தொழில் தொடங்கிச் சம்பாதிக்கும் வகையில், கிரைண்டர் வாங்குவதற்கு ரூ.5,000 மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதி உதவி குறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள், குறிப்பாக கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்றோர் சொந்தக் காலில் நிற்க இத்திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள கிரைண்டர் வாங்கும் பயனாளிகளுக்கு, அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும்.
உதாரணமாக, ஒரு பயனாளி ரூ.15,000 மதிப்புள்ள கிரைண்டரை தேர்வு செய்தால், அவருக்கு அரசின் சார்பில் ரூ.5,000 மானியம் கிடைக்கும். மீதமுள்ள தொகையை மட்டும் அவர் செலுத்தினால் போதுமானது. இது இட்லி, தோசை மாவு தயாரித்து விற்பனை செய்யும் சிறு தொழில் முனைவோருக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சில முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்த 25 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியம். முன்னுரிமை அடிப்படையில் கைம்பெண்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை குறித்துப் பார்க்கையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகித் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், இத்திட்டம் தங்கள் பகுதியில் செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Read More : புதிய ரேஷன் கார்டு..!! வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்..!! எப்போது கிடைக்கும்..? வெளியான குட் நியூஸ்..!!



