தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் மகத்தான திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாள் உற்சாகமாகவும் கோலாகலமாகௌம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது.. இது, விவசாயம், சூரிய வழிபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பண்டிகையாக உள்ளது.
பொங்கல் முக்கியத்துவம்
பொங்கல் என்பது “பொங்கிப் பெருகுதல்” என்ற அர்த்தம் கொண்டது. புது அரிசி, பால், வெல்லம் சேர்த்து சமைக்கும் போது அது பொங்கி மேலே வரும் தருணம் செழிப்பு, வளம், மகிழ்ச்சி ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகிறது. குறிப்பாக வீட்டு வாசலில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரிய பொங்கல் வைக்கப்படுவது வழக்கம்.. இது தமிழர்களின் இயற்கைநேச மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது.
பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி, பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் இந்த போகிப் பண்டிகை.. இரண்டாம் நாள் தை பொங்கல், சூரிய பகவானுக்கு நன்றி கூறும் முக்கிய நாள். மூன்றாம் நாள் மாட்டு பொங்கல், விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் நாள். நான்காம் நாள் காணும் பொங்கல், உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியைப் பகிரும் தினமாகும்.
இந்த நாட்களில் வீடுகள் தோரணங்களாலும் கோலங்களாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் போட்டி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.
பொங்கல் வரலாறு
பொங்கல் பண்டிகையின் வரலாறு சங்க காலத்திலேயே தொடங்குகிறது. தமிழர்கள் சூரியனை “சூரிய பகவான்” என வழிபட்டு, அவன் அருளால் பயிர்கள் செழித்து விளைந்ததற்காக நன்றி கூறும் வழக்கமே பொங்கலாக உருவெடுத்தது. சங்க இலக்கியங்களான புறநானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றில் அறுவடை விழாக்கள் மற்றும் இயற்கை வழிபாடு குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. “பொங்கிப் பெருகுதல்” என்ற பொருளில், பால் மற்றும் புதிதாக விளைந்த அரிசியைச் சேர்த்து பொங்கவைத்து சூரியனுக்கு படைப்பதே இந்த திருவிழாவின் அடையாளமாக மாறியது.
பிற்காலத்தில் இது தை மாதத்தின் முதல் நாளான தை பொங்கல் என நிலைபெற்று, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் குடும்ப உறவு ஆகிய மூன்றையும் போற்றும் நான்கு நாள் திருவிழாவாக வளர்ந்தது. போகி, தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என பிரிக்கப்பட்ட இந்த விழா, உழைப்புக்கும் இயற்கைக்கும் மரியாதை செலுத்தும் தமிழர் பண்பாட்டின் சாட்சியாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?
சூரியப் பொங்கல் வைக்கும் வழக்கம் கொண்டவர்கள் இன்று காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பே பொங்கல் வைத்து வழிபடலாம்.. இது தான் சூரியப் பொங்கலாகும்.. இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.. எனவே சூரியன் உதயமாவதற்கு முன்பு காலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த நேரத்தில் வைப்பது நல்லது.
காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 7.45 முதல் 8.45 மணி வரை வைக்கலாம்.. இந்த நேரத்தில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 10.35 மணி முதல் பகல் 1.00 மணி வரை வைக்கலாம். காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம் இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் பானை வைப்பதை தவிர்க்க வேண்டும்..
இன்று மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை ராகுகாலம் இருப்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைக்ககூடாது.. இந்த பொங்கல் திருநாளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், மஞ்சள், இஞ்சி, கரும்பு, காய்கறிகள், சுண்டல், அடை ஆகியவற்றை படைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்..
நவீன வாழ்க்கை மாறிவிட்டாலும், பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்பாட்டுச் சுவடுகளை இன்றும் உறுதியாகத் தக்க வைத்திருக்கிறது. உணவுக்கும் உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் இந்த விழா, தமிழர் வாழ்வின் அடிப்படை தத்துவங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கிறது. அதனால் தான் பொங்கல் – ஒரு பண்டிகை மட்டுமல்ல; அது தமிழர்களின் வாழ்வியல் தத்துவம் என்பதே மறுக்க முடியாத உண்மை.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!



