பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்தப் புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்ற விடுமுறை நாட்களை குறிவைத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம், தான் உடனடியாக ஜாமீன் பெறுவதை தடுக்க அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். “எனது அலுவலகத்திற்கு சீல் வைப்பது மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ‘சவுக்கு மீடியா’வின் குரலை ஒட்டுமொத்தமாக ஒடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அரசு இத்தகைய அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களை சந்தித்து வரும் சவுக்கு சங்கர், அடுத்த ஒன்றரை மாத காலத்திற்கு (40 முதல் 45 நாட்கள்) தன்னையும் தனது குழுவினரையும் முடக்குவதற்கான ஒரு விரிவான திட்டத்தை அரசு வகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “இந்த அடக்குமுறைகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.



