தமிழக குடும்பங்களின் பொங்கல் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் வகையில், தமிழக அரசு ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகை அறிவித்தது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்புடன் கூடிய நிதி உதவி சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. . கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நாளொன்றுக்கு 300 பயனாளிகள் வீதம் டோக்கன் முறையில் இந்த விநியோகம் சீராக நடைபெற்று வந்தது.
பண்டிகை கால விடுமுறையையொட்டி எவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, போகிப் பண்டிகை தினமான 14-ஆம் தேதியன்றும் ரேஷன் கடைகள் செயல்பட அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் பலனாக 90 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகள் ஏற்கனவே தங்களின் பொங்கல் பரிசைப் பெற்றுவிட்டனர். இருப்பினும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டதால், அவர்கள் இன்னும் தங்களது பரிசுத் தொகுப்பை பெற முடியாத சூழல் நிலவுகிறது.
சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ள நிலையில், விடுபட்டவர்களுக்கான விநியோகப் பணிகளை தொடர உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடும் என தெரிகிறது. பெரும்பாலும், வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ₹3,000 ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தகுதியுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் அரசின் இந்த நலத்திட்டம் முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும்.



