பிறப்புச் சான்றிதழ் என்பது பாஸ்போர்ட் எடுப்பது முதல் பள்ளிச் சேர்க்கை, சொத்துரிமை, திருமணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், அது வருங்காலத்தில் பெரும் சட்ட சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே, பிறப்புச் சான்றிதழில் உள்ள திருத்தங்களை சீர் செய்யவும், முறைப்படி பெயர் மாற்றம் செய்யவும் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை இங்கே விரிவாக காண்போம்.
பொதுவாக, பிறப்புச் சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளை (Spelling Mistakes) சரி செய்வது மிக எளிதானது. இதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) அல்லது நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் (Health Inspector) உரிய ஆதாரங்களுடன் மனு அளிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோரது அடையாளச் சான்றுகள் மற்றும் மருத்துவமனை வழங்கிய ‘டிஸ்சார்ஜ் சம்மரி’ (Discharge Summary) ஆகியவற்றைச் சமர்ப்பித்தால், அதிகாரிகள் அதனைச் சரிபார்த்து பிழைகளைத் திருத்தித் தருவார்கள். இதற்கு அரசிதழ் அறிவிப்பு தேவையில்லை; ஒரு பிரமாணப் பத்திரமே போதுமானது.
ஆனால், ஒருவரின் முழுப் பெயரையும் மாற்ற விரும்பினால், அதற்கான நடைமுறை சற்று விரிவானது. முதலில் தமிழக அரசின் அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வக் காப்பாளர் கையொப்பமிட வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள் என்றால், பதிவுபெற்ற மருத்துவரிடம் பெற்ற ‘ஆயுள் சான்றிதழை’ (Life Certificate) அசலாக இணைக்க வேண்டும். இதற்கான கட்டணமான ரூ.750-ஐ www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் வழியாகச் செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற வேண்டும்.
பெயர் மாற்றத்திற்குத் தேவையான விண்ணப்பங்களை www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் பழைய பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த ஆவணத்தைக் கொண்டு பிறப்புப் பதிவாளரிடம் விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெறலாம். அதன் பின்னரே ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்ற பிற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய இயலும்.
அரசிதழில் பெயர் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் அதனை நேரில் பெற்றுக்கொள்ளலாம், இல்லையெனில் தபால் மூலம் அனுப்பப்படும். ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, “என்கிற” (Alias) என்ற பெயரில் பிரசுரிக்க அனுமதி இல்லை என்பதும், அச்சுப்பிழைகள் ஏதேனும் இருந்தால் 6 மாதத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்பதும் மிக முக்கியமான விதியாகும். முறையான ஆவணங்களுடன் அணுகினால், உங்கள் அடையாளச் சிக்கல்களை எளிய முறையில் தீர்த்துக்கொள்ளலாம்.



