அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமரின் குழந்தை வடிவமான ராம்லல்லாவின் சில கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் முதல் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் குழந்தை வடிவமான இந்த சிலை மூடப்பட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி சிறப்பு பூஜைக்கு பின் இந்த சிலையின் கண்கள் திறக்கப்படும் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். வியாழக்கிழமை (நேற்று) கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் முடிந்ததும், கருவறையில் இருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியானது.
ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை, 150 கிலோ எடை கொண்டது. தரையில் இருந்து அளந்தால் மொத்த உயரம் ஏழு அடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.