தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார். கடந்த 2025-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பான வழக்கிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோக சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மாநில அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போதிலும், இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து, பிரசார வாகனத்தின் ஓட்டுநர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எனப் பல தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கியப் பகுதியாக, தவெக தலைவர் விஜய்க்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, ஜனவரி 12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பினர். அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், குரல் பதிவாகவும் பதிவு செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை, இன்று மீண்டும் தொடங்குகிறது. இன்றைய விசாரணையில், பிரசாரக் கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Read More : “அன்புமணி தலைவரே கிடையாது”..!! “இனி அப்படி அழைக்காதீங்க”..!! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!!



