கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாயமான வாலிபரின் வழக்கில், அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நண்பனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, சிகிச்சை செலவுக்குப் பயந்து அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
மாகடி தாலுகாவைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார், கடந்த ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மது அருந்திய நண்பர்கள், இளநீர் பறிப்பதற்காக வினோத்தை வலுக்கட்டாயமாக தென்னை மரத்தில் ஏறச் சொல்லியுள்ளனர். மரத்தில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத்திற்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் லட்சக்கணக்கில் செலவாகும் என கணக்குப் போட்ட அவரது நண்பர்களான சுதீப் மற்றும் பிரஜ்வல், மனிதாபிமானமற்ற ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
காயத்துடன் துடித்த வினோத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, வாஜரஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் அவரை அமுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் உடலை வெளியே எடுத்து, பெரிய கல்லை அதில் கட்டி அருகிலிருந்த ஒரு கிணற்றில் வீசியுள்ளனர். வினோத்தைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செல்போன் சிக்னல்களை துப்பு துலக்கிய போலீசார், நண்பர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த உண்மைகள் அம்பலமானது. தற்போது கைதான நண்பர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



