2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோலிவுட்டில் இருந்து கோட்டைக்கு குறிவைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் அதிரடிப் பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக நிலவிய அரசியல் மௌனத்தை கலைத்த விஜய், சென்னையில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தனது தேர்தல் நிலைப்பாட்டை தெளிவாகப் பதிவு செய்துள்ளார். “யாரோ தரும் அழுத்தங்களுக்காக நாம் அடிபணியப் போவதில்லை” என கூறியுள்ள அவர், தேர்தல் களத்தில் தவெக தனித்துப் போட்டியிடவும் முழு தயார் நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் தவெக -அதிமுக இடையே கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நகர்வுகள் அந்தக் கதவுகளை மூடியுள்ளன. குறிப்பாக, “ஏற்கனவே தமிழகத்தை ஆண்டவர்கள் சரணடைந்து விட்டார்கள்” என்று மறைமுகமாக அதிமுகவை விமர்சித்ததன் மூலம், பிரதான திராவிட கட்சிகளுடன் இப்போதைக்கு இணக்கமான சூழல் இல்லை என்பதை காட்டியுள்ளார் விஜய்.
சிபிஐ மற்றும் மத்திய அரசின் விசாரணை அழுத்தங்களுக்குப் பணிந்து விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவார் என்ற யூகங்களுக்கு, “பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை” என்று அதிரடியாக கூறியுள்ளார். தற்போதைய சூழலில் திமுக, அதிமுக கூட்டணிகள் ஒருபுறமும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்த பாதையிலும் பயணிக்கின்றன. இதற்கிடையே விஜய்யின் தவெக-வும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதால், தமிழகத் தேர்தல் களம் ஒரு வலுவான நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்கிறது.



