இன்றைய அவசர உலகில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது ஒரு சவாலான காரியமாகிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை, பணிச்சுமை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பலரும் முறையான தூக்கத்தையும் சத்தான உணவையும் இழந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பலரும் நள்ளிரவு வரை கண் விழிப்பதோடு, அந்த நேரத்தில் கண்ட உணவுகளைச் சாப்பிட்டு உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இரவு தூக்கத்தைச் சிதைக்கும் மற்றும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அந்த 6 உணவுகளைப் பற்றி இங்கே காண்போம்.
முதலில், தூங்குவதற்கு முன்பு சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக டார்க் சாக்லேட்டுகளில் காஃபின் மற்றும் சர்க்கரை அதிகளவில் இருப்பதால், அது மூளையை விழிப்புடன் வைத்து தூக்கத்தைத் தள்ளிப்போடும். மேலும், இதிலுள்ள அதிகப்படியான கலோரிகள் உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். அதேபோல், இரவு உணவில் அதீத காரத்தைச் சேர்த்துக் கொள்வதும் ஆபத்தானது. காரமான உணவுகளில் உள்ள ‘கேப்சைசின்’ (Capsaicin) உடல் வெப்பத்தை உயர்த்துவதுடன், நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும்.
பீட்சா, பர்கர் போன்ற சீஸ் நிறைந்த உணவுகள் இரவு நேரத்திற்கு ஏற்றவை அல்ல. சீஸில் உள்ள அதிகப்படியான கொழுப்பு செரிமான மண்டலத்திற்குப் பெரும் சுமையை அளிக்கும். அதேபோல, பலருக்கு இரவு நேரத்தில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உண்டு. காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை விரட்டுவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தம் மற்றும் சோர்வையும் உண்டாக்கும். தூங்குவதற்கு குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்பே காபி குடிப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆரோக்கியமானவை என்று கருதப்படும் சிட்ரஸ் பழங்களை (எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை) இரவு நேரத்தில் தவிர்ப்பது சிறந்தது. இவற்றிலுள்ள அமிலத்தன்மை தூக்கத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும், இந்தப் பழங்களில் உள்ள நீர்ச்சத்து காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், இது ஆழ்ந்த தூக்கத்தைப் பாதிக்கும். இறுதியாக, இரவு நேர இனிப்பு வேட்டையில் ஐஸ்கிரீமைத் தவிர்ப்பது அவசியம். அதிகப்படியான சர்க்கரையும் கொழுப்பும் நிறைந்த ஐஸ்கிரீம், செரிமானத்தைச் சிக்கலாக்கி உங்களை இரவு முழுவதும் புரண்டு படுக்க வைக்கும்.
Read More : பிரிட்ஜில் காய்கறிகளை வைக்கும்போது உஷார்..!! கல்லீரலை கூட பாதிக்கும்..!! சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!!



