தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் தான் நேரடியாக களம் காணப்போவதில்லை என்றும் தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதை விட, தனது கட்சியினரை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சர்களாக பார்ப்பதே என்னுடைய தற்போதைய இலக்கு” என தனது புதிய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
டி.டி.வி. தினகரனின் இந்த முடிவின் பின்னணியில் மிகத் தெளிவான அரசியல் கணக்குகள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் இணைந்து பயணிக்க முடிவெடுத்துள்ள நிலையில், தனது போட்டியானது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே எவ்வித உராய்வையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளார்.
இருப்பினும், தினகரன் நேரடியாகப் போட்டியிடாததற்கு மற்றொரு முக்கியக் காரணமும் அரசியல் ரீதியாகப் பேசப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்துவிட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக மற்றும் பாஜகவின் பேராதரவுடன் மாநிலங்களவைக்கு தேர்வாக அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று, தேசிய அரசியலில் தனது பிம்பத்தை வலுப்படுத்த அவர் விரும்புவதாக தகவல்கள் கசிகின்றன.
மறுபுறம், சசிகலா இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது நிகழ்ந்தால், தென் மண்டலத்தில் திமுகவுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இந்த தேர்தல் அமையும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். டி.டி.வி. தினகரனின் இந்த ஒதுங்கி நிற்கும் வியூகம், அவருக்குப் பின்னடைவா அல்லது மத்திய அமைச்சர் என்ற பெரிய பதவியை நோக்கிய பாய்ச்சலா என்பது வரும் தேர்தலின்போது தெரியவரும்.
Read More : இனி பத்திரப் பதிவுக்கு இது அவசியம்..!! செக் வைத்த தமிழ்நாடு அரசு..!! ஒப்புதல் கொடுத்த ஜனாதிபதி..!!



