சுதந்திர இந்தியாவின் நிதி வரலாற்றை எழுதும் போது, அதில் ஒரு தமிழரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது அவசியம். பலரும் அறிந்திராத ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை ஒரு தமிழரையே சாரும். கோயம்புத்தூரின் மைந்தரான ஆர். கே. சண்முகம் செட்டி தான், 1947 நவம்பர் 26 அன்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற இவர், ஒரு சிறந்த பொருளாதார மேதை மட்டுமல்லாது தேர்ந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். அவர் தாக்கல் செய்தது முழுமையான பட்ஜெட் அல்ல; அது ஒரு இடைக்கால பட்ஜெட் ஆகும். 1947 ஆகஸ்ட் 15 முதல் 1948 மார்ச் 31 வரையிலான சுமார் ஏழரை மாத காலத்திற்கான இந்த நிதித் திட்டம், நவீன இந்தியாவின் பொருளாதாரப் பயணத்திற்கு ஒரு திசைகாட்டியாக அமைந்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டின் மொத்த மதிப்பு வெறும் 197.29 கோடி ரூபாய் மட்டுமே என்பது இன்று நமக்குப் வியப்பை ஏற்படுத்தலாம்.
தேசப் பிரிவினைக்குப் பிந்தைய சூழலில், எல்லையில் நிலவிய பதற்றம் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு ஆகிய சவால்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது. இதனால் அந்த பட்ஜெட்டில் சுமார் 46 சதவீத தொகை (ரூ. 92.74 கோடி) பாதுகாப்புத் துறைக்கே ஒதுக்கப்பட்டது. மேலும், நாட்டில் நிலவிய கடுமையான உணவுப் பற்றாக்குறையை தீர்க்கவும், விவசாய துறையை பலப்படுத்தவும் முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியால் நலிவடைந்திருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க இந்த பட்ஜெட்டே அஸ்திவாரமாக அமைந்தது.
அரசியல் மற்றும் நிதி நிர்வாகத்தை தாண்டி, ஆர். கே. சண்முகம் செட்டி உலக அளவில் இந்தியாவின் பொருளாதார முகமாக திகழ்ந்தார். லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘பிரெட்டன் வூட்ஸ்’ மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இவர், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி ஆணையம் (IMF) உருவாவதற்கான ஆலோசனைகளை வழங்கிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் என்பது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
Read More : பட்டா + சிட்டா + சர்வே எண்..!! நில ஆவணங்கள் குறித்த A to Z தகவல்கள்..!! இதை படித்தால் இனி ஏமாற மாட்டீங்க..!!



