2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரும் பிப்ரவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்குமாறு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள், உள்துறை செயலாளர்கள் ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்புப் படைகளின் தேவை மற்றும் தேர்தல் பார்வையாளர்களின் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாகப் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்னதாகவே அனைத்து அடிப்படை பணிகளையும் முடிக்குமாறு அந்தந்த மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2026 தேர்தல் களம் பல்வேறு புதிய கட்சிகளின் வருகையாலும், வலுவான கூட்டணி மாற்றங்களாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நகர்வு அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : விஜய்யின் மாஸ்டர் பிளான்..!! அதிமுகவின் முக்கியப் புள்ளியை வளைத்துப் போட்ட தவெக..!! அதிர்ச்சியில் இபிஎஸ்..!!



