காரைக்காலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் மஸ்தான் சாகிபு வலியுல்லா தர்காவின் 203-வது கந்தூரி விழாவை முன்னிட்டு, நாளை (ஜனவரி 29) அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘சந்தனக்கூடு’ ஊர்வலம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை ஒருநாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஆட்சியர் இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையைப் பிறப்பித்துள்ளார். இருப்பினும், இந்த விடுமுறையானது காரைக்கால் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், புதுச்சேரி, மாகி, ஏனாம் போன்ற பகுதிகளுக்கோ அல்லது அண்டை மாநிலமான தமிழக மாவட்டங்களுக்கோ பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜாதி, மத பேதமின்றி மக்கள் திரளாக கூடும் இத்திருவிழாவிற்காக நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. நீண்ட கால பாரம்பரியம் கொண்ட இந்த கந்தூரி விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன.



