2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.. திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் 20 சட்டமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசாப் சீட் ஆகியவற்றை தேமுதிக கேட்டதாக கூறப்படுகிறது.. எனினும் திமுக தரப்போ 4 முதல் 5 தொகுதிகள் வரை தான் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டதாம்.. தற்போது 12 தொகுதிகளையாவது கொடுங்கள் என தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..
எனினும் தற்போதைய கூட்டணி கட்சிகளை விட தேமுதிகவுக்கு அதிக சீட் கொடுக்க வாய்ப்பில்லை எனவும் திமுக திட்டவட்டமாக கூறிவிட்டதாம்.. அதே போல் தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் அது திமுக கூட்டணியில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் திமுக கூறியதாகவும் தெரிகிறது.. இதனால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் தேமுதிகவை விட அதிக தொகுதிகளை கேட்கும் என்றும் திமுக கருதுகிறதாம்..
எனவே தேமுதிகவை விட தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகள் தான் முக்கியம் எனவும் திமுக நினைக்கிறதாம்.. எனவே தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று திமுக உறுதியாக கூறவிட்டதாம்.. இதனால் திமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது..



