வெற்றியை தரும் தெய்வமாகவும், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகவும் போற்றப்படும் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றிட உகந்த நாளான தைப்பூசம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்னை பராசக்தியிடம் இருந்து தீய சக்திகளை அழிக்க முருகப்பெருமான் ‘ஞானவேல்’ பெற்ற இந்த உன்னத நாளில், அவரை எப்படி முறைப்படி வழிபட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம் என்பது குறித்த விரிவான தொகுப்பை இங்கே காணலாம்.
தை மாத வளர்பிறை பௌர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைவதே தைப்பூச திருநாளாகும். இந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி அதிகாலை 04:41 மணி முதல் பிப்ரவரி 2 அதிகாலை 04:43 மணி வரை பௌர்ணமி திதி நிலவுகிறது. அதேபோல், பிப்ரவரி 1 அதிகாலை 01:54 மணி முதல் பிப்ரவரி 2 அதிகாலை 01:01 மணி வரை பூசம் நட்சத்திரம் நீடிக்கிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் இந்த இரண்டு சிறப்புகளும் நீடிப்பதால், அன்று முழுவதுமே வழிபாட்டிற்கு உகந்த நேரமாகும்.
தைப்பூசத்தன்று அதிகாலையிலேயே நீராடி, முருகப்பெருமானின் திருவுருவப் படத்தின் முன் விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் அதற்குப் பால் அல்லது சந்தன அபிஷேகம் செய்து ‘வேல் பூஜை’ செய்வது அதீத பலன்களைத் தரும். முருகனுக்கு விருப்பமான செவ்வரளி, செவ்வந்தி மலர்களால் அலங்கரித்து, தேன் மற்றும் திணை மாவு அல்லது தயிர் சாதத்தை நைவேத்தியமாகப் படைக்கலாம். அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று அபிஷேகப் பொருட்களைத் தானமாக வழங்குவதுடன், ஆறு நெய் தீபங்கள் ஏற்றி ‘ஓம் சரவணபவாய நம’ என்ற மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வது வாழ்வில் இருக்கும் தடைகளை தகர்க்கும்.
குழந்தைப் பேறு, திருமண தடை நீங்குதல், தீராத நோய் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெற விரும்புவோர் இந்தத் தைப்பூச விரதத்தை மனதார மேற்கொள்ளலாம். மாலையில் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்த பின்னரோ அல்லது கிரிவலம் சென்றோ விரதத்தை நிறைவு செய்யலாம். குறிப்பாக, வாயில்லாத ஜீவராசிகளுக்கு அன்று அன்னதானம் செய்வது நம்முடைய கர்ம வினைகளைப் போக்கி முருகனின் பூரண அருளைப் பெற்றுத் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.



