மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன.
குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் கருவிகள் மற்றும் வெண்டிங் மெஷின்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, உணவகங்கள் மற்றும் அலுவலகங்களில் காஃபி விலை உயரக்கூடும்.
விவசாய துறையைப் பொறுத்தவரை, உரம் தயாரிப்பிற்கு இன்றியமையாத அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் அம்மோனியம் நைட்ரோ பாஸ்பேட் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி விலக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது உரங்களின் உற்பத்திச் செலவை அதிகரித்து, விவசாயிகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
மேலும், சொகுசுப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் கணிசமாக அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, குடைகள், விலையுயர்ந்த காலணிகள், வீடியோ கேம் உதிரிபாகங்கள், அடல்ட் டயாபர்கள் மற்றும் சில வகை கேமராக்களின் விலையும் வரும் நாட்களில் உயரவிருக்கின்றன. அதேபோல், சிகரெட், பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் மீதான ‘ஹெல்த் செஸ்’ வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் அதிரடியாக உயரும்.
அதேசமயம், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, செக்யூரிட்டி பரிவர்த்தனை வரி (STT) உயர்த்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் வழியாகப் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் வசூலிக்கப்படும் இந்த நேரடி வரி உயர்வால், தினசரி வர்த்தகம் செய்வோர் (Intraday Traders) மற்றும் சிறு முதலீட்டாளர்கள் அதிகப் பாதிப்புக்குள்ளாவார்கள். இது சந்தையின் பணப்புழக்கத்தை சற்றே குறைக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் நிலக்கரி, சிடி-ரோம் போன்றவற்றின் விலையேற்றமும் மறைமுகமாக மின்சாரம் மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரி மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், உடனடி விளைவாகப் பொதுமக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து கூடுதல் பணத்தை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.



