தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் ஒரு பிஞ்சு குழந்தை மற்றும் தாயையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நகேஷின் மனைவி மமதாவிற்கு (25) தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தில் பெரும் புயல் வீசியுள்ளது.
தனது கணவரின் தவறான பாதையை கண்டித்த மமதா, சுஜாதாவுடனான தொடர்பை உடனடியாக துண்டிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, தங்களின் முறையற்ற உறவிற்கு மமதா தடையாக இருப்பதாகக் கருதி, அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகத் தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர், நகேஷ் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது வெறிச்செயலை அரங்கேற்றியுள்ளார்.
சம்பவத்தன்று மமதா தனது 6 மாத குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த தருணத்தில், ஆவேசத்துடன் வீட்டிற்குள் புகுந்த சுஜாதா, மறைத்து வைத்திருந்த பெட்ரோலைத் தாய் மற்றும் குழந்தை மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். தீப்பற்றி எரிந்த நிலையில் மமதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், உடல் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் சேயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து நாம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொலையாளி சுஜாதாவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முறையற்ற காதலால் ஒரு குடும்பமே சிதைந்து, ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோயுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



