பற்களின் ஆரோக்கியம் என்பது வெறும் புன்னகைக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாகும். நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தீவிரப் பாதிப்புகளை தடுப்பதில் பற்கள் பராமரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், பற்களை பாதுகாப்பது என்பது பெரும் செலவுமிக்க காரியம் அல்ல; மிக எளிய வாழ்வியல் மாற்றங்கள் மூலமே ஆரோக்கியமான பற்களைப் பெற முடியும். அந்த வகையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியப் பராமரிப்பு முறைகளை இங்கே காண்போம்.
பல் துலக்கும் முறை மற்றும் நேரம்: நம்மில் பெரும்பாலானோர் 45 விநாடிகளுக்குள்ளாகவே பல் துலக்கி முடித்துவிடுகிறோம். ஆனால், மருத்துவ அமைப்புகளின் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு இரண்டு முறை, தலா 2 நிமிடங்கள் முழுமையாகப் பல் துலக்க வேண்டியது அவசியம். மிருதுவான பிரஷ்களைப் பயன்படுத்துவதும், ‘புளோரைடு’ நிறைந்த டூத்பேஸ்ட்டை தேர்ந்தெடுப்பதும் பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுத்து எனாமலை பாதுகாக்கும்.
ஈறுகளுக்கான கூடுதல் கவனம் : சாதாரண பிரஷ்கள் பற்களின் மேற்பரப்பை 60 சதவீதம் மட்டுமே சுத்தம் செய்கின்றன. பற்களுக்கு இடையே ஒளிந்திருக்கும் அழுக்குகளை நீக்க ‘பிளாஸ்’ (Floss) அல்லது ‘இண்டர்டெண்ட்டல் பிரஷ்’ (Interdental brush) பயன்படுத்துவது அவசியம். இது பற்களுக்கு இடையே சிக்கியிருக்கும் உணவுத் துகள்களை அகற்றி, ஈறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
வாய் கொப்பளிப்பதில் கவனிக்க வேண்டியவை : பல் துலக்கிய பிறகு பலரும் செய்யும் பொதுவான தவறு, அதிக நீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பது. இப்படிச் செய்யும்போது பேஸ்ட்டில் உள்ள ‘புளோரைடு’ சத்து முழுமையாக வெளியேறிவிடும். எனவே, பேஸ்ட்டை துப்பிய பிறகு லேசாக வாய் கொப்பளிப்பது மட்டுமே சிறந்தது. எனாமலில் படிந்திருக்கும் சிறிதளவு புளோரைடு பற்களை உறுதிப்படுத்த உதவும்.
சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கட்டுப்பாடு : அதிகப்படியான சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அமிலமாக மாறுகின்றன. இந்த அமிலம் அடுத்த 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பற்களின் எனாமலை மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கும். எனவே, இனிப்புப் பண்டங்களைக் குறைப்பது பற்களின் ஆயுளைக் கூட்டும்.
முறையான மருத்துவப் பரிசோதனை : பொதுவாக பற்களில் வலி ஏற்பட்ட பின்னரே பலரும் பல் மருத்துவரை நாடுகிறார்கள். ஆனால், வலி வரும்போதே பாதிப்பு தீவிரமடைந்துவிட்டது என்றுதான் அர்த்தம். எனவே, வலி வரும் வரை காத்திருக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது ஆரம்பகட்டப் பாதிப்புகளைக் கண்டறிய உதவும்.
இவற்றுடன், போதைப் பழக்கங்களை தவிர்ப்பது, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற பழக்கங்கள் உங்கள் பற்களை நீண்ட காலத்திற்கு உறுதியாக வைத்திருக்க உதவும்.
Read More : ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..!! வட்டி மட்டுமே இவ்வளவா..? பட்ஜெட் சொல்லும் பகீர் தகவல்..!!



