‘நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்ற பழமொழியே குலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை உரக்க சொல்கிறது. எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், ஒரு குடும்பத்தின் வேராகவும், வழிகாட்டியாகவும் விளங்குவது அந்த வம்சத்தின் முன்னோர்களால் காலம் காலமாக வழிபடப்பட்டு வரும் குலதெய்வம் மட்டுமே. பெரும்பாலும் கிராம தேவதையாகவோ அல்லது காவல் தெய்வமாகவோ விளங்கும் குலதெய்வம், தனது வம்சாவளியினரை எவ்வித ஆபத்தும் இன்றிப் பாதுகாக்கும் கவசமாக திகழ்கிறது.
குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் :
குலதெய்வ வழிபாடு என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அல்லது சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் ஆன்மிக பிணைப்பாகும். முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கும், வாழ்வின் தடைகளை நீக்கி வளம் பெறுவதற்கும் குலதெய்வத்தை வணங்குவது மிக அவசியமாகக் கருதப்படுகிறது. நமது கலாசார மற்றும் ஆன்மிக அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பாலமாகவும் இது விளங்குகிறது.
குடும்பத்தில் நடக்கும் சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும், குலதெய்வத்திற்குத்தான் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் முதல் மொட்டை மற்றும் காதுகுத்து வைபவங்கள் குலதெய்வக் கோயிலிலேயே நடத்தப்படுகின்றன. வாழ்வில் தொடர் தோல்விகளையும், மனக்கஷ்டங்களையும் சந்திப்பவர்கள் சிறந்த ஜோதிடர்களை அணுகினால், அவர்கள் முதலில் பரிந்துரைப்பது குலதெய்வ வழிபாட்டைத்தான். எத்தகைய கிரக தோஷங்கள் இருந்தாலும், குலதெய்வத்தின் அருள் இருந்தால் அவை நீங்கி நற்காரியங்கள் கைகூடும் என்பது ஆணித்தரமான நம்பிக்கை.
மறந்த குலதெய்வத்தை கண்டறிவது எப்படி..?
வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்காக பிழைப்பு தேடி இடம்பெயர்ந்த பல குடும்பங்களில், இரண்டு மூன்று தலைமுறைகளை கடக்கும்போது தங்களது குலதெய்வம் எது என்ற விவரமே தெரியாமல் போய்விடுகிறது. இழந்த இந்த ஆன்மிக தொடர்பை மீண்டும் மீட்டெடுக்கப் பல வழிகள் உள்ளன.
பெயர்களை ஆராய்தல் : பொதுவாக முன்னோர்களின் பெயர்கள் குலதெய்வத்தின் பெயரையே தாங்கி இருக்கும். தாத்தா, கொள்ளு தாத்தா போன்ற மூதாதையர்களின் பெயர்களைச் சேகரித்துப் பார்த்தாலே குலதெய்வத்தின் பெயரை எளிதில் யூகித்துவிடலாம்.
விளக்கேற்றி வேண்டுதல் : வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் குத்துவிளக்கை ஏற்றி, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, குலதெய்வத்தை மனமுருக வேண்டினால், ஏதோ ஒரு வகையில் அதன் அடையாளம் நமக்குத் தெரியவரும் என்பது ஆன்மிகப் பெரியோர்களின் வாக்கு.
ஜாதக ரீதியான ஆய்வு : ஜாதகத்தில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தெய்வ ஸ்தானத்தை ஆராய்வதன் மூலம், ஒரு சிறந்த ஜோதிடரால் உங்கள் குலதெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா என்பதைக் கண்டறிந்து சொல்ல முடியும்.
நாம் குலதெய்வத்தை மறந்தாலும், அந்தத் தெய்வம் நம் வம்சத்தைக் கைவிடாது. எனவே, குலதெய்வம் எது என்று தெரிந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் சென்று வழிபடுவதும், தெரியாதவர்கள் அதைத் தேடிக் கண்டறிந்து வழிபடத் தொடங்குவதும் வாழ்வில் நிம்மதியையும், மன அமைதியையும் தேடித் தரும்.
Read More : ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..!! வட்டி மட்டுமே இவ்வளவா..? பட்ஜெட் சொல்லும் பகீர் தகவல்..!!



