உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், கள்ளக்காதலியை தனது மனைவியுடன் சேர்ந்து காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பணியாற்றி வந்த விஜய் குமார் சாஹ்னி என்பவருக்கும், பிரியா ஷெட்டி (35) என்பவருக்கும் இடையே கடந்த 2012-ம் ஆண்டு முதல் ‘லிவ்-இன்’ முறையில் உறவு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளான்.
விஜய் குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து, கடந்த 2014-ம் ஆண்டு சந்தியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். காலப்போக்கில் இந்த விவகாரம் பிரியாவிற்குத் தெரியவரவே, தன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், கோரக்பூரில் உள்ள சொந்த ஊருக்குத் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் விஜய்க்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதன் விளைவாக, பிரியாவை தீர்த்துக்கட்ட விஜய் குமார் ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, விஜய் தனது மனைவி சந்தியா மற்றும் பிரியா ஆகிய இருவரையும் மும்பையில் இருந்து கோரக்பூருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஜனவரி 29-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த பிரியாவை விஜய்யும் அவரது மனைவி சந்தியாவும் இணைந்து கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், அவர் முகத்தை சிதைத்ததோடு, உடலை நிர்வாணமாக்கி பிபி கஞ்ச் அருகே உள்ள பாலத்தின் அடியில் வீசிச் சென்றுள்ளனர்.
ஆளில்லாத இடத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய கோரக்பூர் காவல்துறையினர், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது கொலையாளிகள் குறித்த ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட விஜய் குமார், அவரது மனைவி சந்தியா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த விஜய்யின் மாமனார் ஆகிய மூவரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.



