வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நகைகள் கொண்டு வர விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு “பேக்கேஜ் ரூல்ஸ், 2026 (Baggage Rules, 2026)” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுங்க பயணப் பெட்டி விதிகளில், நகைகளுக்கான மதிப்பு வரம்பு நீக்கப்பட்டு, ஆனால் எடை வரம்பு முந்தையபடி தொடர்கிறது.
இந்தச் சட்டத்தின் படி, நகைகள் (Jewellery) என்பது ஒருவர் வழக்கமாக அணியும் அலங்காரப் பொருட்கள் ஆகும். அவை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் அல்லது பிற மதிப்புமிக்க உலோகங்களில் செய்யப்பட்டிருக்கலாம்; கற்கள் பதிக்கப்பட்டிருந்தாலும் இல்லையாலும், அவை நகைகளாகவே கருதப்படும்.
இந்தியாவில் நகைகளுக்கான புதிய பயணப்பெட்டி விதி
அரசு, பழைய மதிப்பு வரம்புகளை நீக்கி, நகைகளுக்கான சிறப்பு சலுகைகளை முழுமையாக எடை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்து இந்தியாவிற்கு திரும்பும் தகுதி பெற்ற இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளி சுற்றுலாப் பயணிகள், சுங்க வரி இன்றி நகைகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த விதிகளின்படி, பெண் பயணிகள் அதிகபட்சமாக 40 கிராம் நகைகளை, பெண் அல்லாத பயணிகள் (ஆண்கள் உள்ளிட்டோர்) அதிகபட்சமாக 20 கிராம் நகைகளை,
சுங்க வரி இன்றி கொண்டு வரலாம். இது முந்தைய விதிகளிலிருந்த எடை வரம்பே ஆகும். மேலும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 40 கிராம் வரை தங்க நகைகளை எந்தச் சுங்க வரியும் செலுத்தாமல் கொண்டு வரலாம்.
இதன் மூலம், முன்பு இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், இன்றைய தங்க விலையை கணக்கில் எடுத்தால், பெண்கள் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வரி இன்றி கொண்டு வர முடியும்.
முந்தைய விதிகள் (Old Baggage Rule)
முந்தைய விதிகளின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள ஆண்கள் 20 கிராம் தங்கம் (அதிகபட்ச மதிப்பு ரூ. 50,000) வரை, பெண்கள் மற்றும் குழந்தைகள் 40 கிராம் தங்கம் (அதிகபட்ச மதிப்பு ரூ. 1,00,000) வரை, சுங்க வரி இன்றி கொண்டு வர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
புதிய மாற்றம் என்ன?
புதிய விதிகளில், எடை வரம்பு மாறவில்லை (பெண்களுக்கு 40 கிராம், பிறருக்கு 20 கிராம்), ஆனால் மதிப்பு (Value) வரம்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ரூ. 1,50,000 ஆக உள்ளது. முந்தைய விதிகளின்படி, ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரி இல்லாத தங்கத்தின் மதிப்பு ரூ. 50,000 ஆக இருந்ததால், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 3 கிராம் தங்கம் மட்டுமே கொண்டு வர முடிந்தது.
ஆனால், புதிய விதிகளின்படி மதிப்பு வரம்பு இல்லாததால், ஒரு ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்து திரும்பும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளி சுற்றுலாப் பயணிகள், பெண் பயணிகள் 40 கிராம், பெண் அல்லாத பயணிகள் 20 கிராம், எடை வரம்புக்குள் இருக்கும் வரை, சுங்க வரி இன்றி நகைகளை கொண்டு வரலாம். இன்றைய தங்க விலையை அடிப்படையாகக் கொண்டால், இந்த விதிகளின் கீழ் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.
அதிக அளவு தங்கம் கொண்டு வந்தால்?
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் அல்லது வெள்ளி கொண்டு வந்தால், அதற்கான இறக்குமதி வரி (Import Duty) செலுத்த வேண்டும். தங்கத்திற்கு தற்போதைய இறக்குமதி வரி 6% ஆகும். செஸ் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து, மொத்த சுங்க வரி சுமார் 9% ஆக இருக்கும். மேலும், தங்கத்தை கொண்டு வரும் போது, விலை மற்றும் தூய்மை (Purity) குறிப்பிடப்பட்ட வாங்கிய ரசீதுகளை (Invoices) காட்ட தயாராக இருக்க வேண்டும்.
அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
மத்திய அரசு பயணப் பெட்டி விதிகளை (Baggage Rules, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சுங்கப் பயணப் பெட்டி (அறிவிப்பு மற்றும் செயலாக்கம்) ஒழுங்குமுறைகள், 2026 மற்றும் ஒரு முதன்மைச் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நகைகள் கொண்டு வரும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : அமெரிக்கா விதித்த செக்.. இந்தியாவின் அதிரடி மூவ்..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு தகவல்..!!



