கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான வைஷாகன், தனது திருமண தகவலை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியதால், அவரை தீர்த்துக்கட்ட வைஷாகன் ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று தனது பட்டறைக்கு அப்பெண்ணை அழைத்த வைஷாகன், “நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம்” என்று கூறி நாடகமாடியுள்ளார்.
இதனைத் தடுக்க முயன்ற பெண்ணை ஆத்திரத்துடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பெண் உயிரிழந்ததை உறுதி செய்த வைஷாகன், அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டு தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர், கொலையை தற்கொலை போல சித்தரிக்க, உடலை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, தனது மனைவிக்கே போன் செய்து பட்டறையில் யாரோ தற்கொலை செய்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். ஆனால், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வைஷாகனின் முகத்திரை கிழிந்தது.
பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் சடலத்துடன் உடலுறவு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வைஷாகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



