தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ’தமிழ் தேசிய புலிகள்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்நிலையில், தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றினார். தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தின் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த மாற்றம் ஜாதி வெறியை நீக்கி கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார். முதலில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. அங்கிருந்தவர்கள் இதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, உடனே கீழே இறக்கி, மீண்டும் சரியாக கொடியை ஏற்றினார். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.