தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்து வரும் அதிரடி நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், பாஜக கூட்டணியிலும் தமக்கான பிடி நழுவி வருவதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், தற்போது தனது அரசியல் வாழ்வை தக்கவைக்க புதிய வியூகங்களை கையாண்டு வருகிறார்.
சமீபகாலமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓபிஎஸ் தரப்பு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, தவெக கூட்டணியில் ஓபிஎஸ் அணிக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக பரப்பப்படும் செய்திகள், வெறும் தகவல்கள் மட்டுமல்ல; அவை டெல்லி பாஜக தலைமைக்கு விடுக்கப்படும் ஒரு அழுத்த அரசியல் யுக்தி என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதன் மூலம் பாஜகவை இறங்கி வர செய்து, அதன் வழியாக எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் அதிமுகவிற்குள் நுழையவே ஓபிஎஸ் திட்டமிடுகிறார். பாஜக தரப்போ, ஓபிஎஸ்ஸை நேரடியாக தங்களது தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கவோ அல்லது அதிமுகவின் ஒரு அங்கமாகப் பார்க்கவோ விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ போன்ற மாற்றுப் பெயரில் தனி அமைப்பாக செயல்படுமாறு அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு நிகரான ஒரு அதிகாரமிக்க தலைவராகவே தன்னை நிலைநிறுத்த விரும்பும் ஓபிஎஸ், விஜய் என்ற துருப்பு சீட்டை பயன்படுத்தி தனது பேர வலிமையை அதிகரித்து வருகிறார். தற்போது தமிழக அரசியல் களம் முழுக்க யூகங்களாலும், திரைமறைவு பேச்சுவார்த்தைகளாலும் சூழப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக உண்மையில் ஓபிஎஸ்ஸை ஏற்குமா அல்லது இது ஓபிஎஸ் தரப்பு நடத்தும் ஒரு பூச்சாண்டி அரசியல் மட்டும்தானா என்பது இன்னும் சில காலங்களில் தெரிந்துவிடும். 2026-ல் ஓபிஎஸ்ஸின் இந்த சதுரங்க ஆட்டம் அவருக்குப் புதிய அரியணையை தருமா அல்லது அரசியல் ரீதியாக அவரை மேலும் தனிமைப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read More : தவெகவில் வெடித்த புதிய போர்..!! கட்சியில் இருந்து வெளியேறும் ஜான் ஆரோக்கியசாமி..? அதிர்ச்சியில் விஜய்..!!



