அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவி வந்த கசப்புணர்வை நீக்கும் வகையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகளை அமெரிக்கா கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், தனது ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tax) கொள்கையின் மூலம் உலக நாடுகளை அதிர வைத்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதன் பின்னணியில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததைக் காரணம் காட்டி, மேலும் 25 சதவீத அபராத வரி விதிக்கப்பட்டு, மொத்த வரிச் சுமை 50 சதவீதமாக எகிறியது. இதனால் இந்திய தொழில்துறையினர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சுமூகப் பேச்சுவார்த்தையின் பலனாக, தற்போது 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த ஜவுளித் தொழில்துறையினருக்கு இந்த வரி குறைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்திற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி முற்றிலும் நீக்கப்பட்டிருப்பதுடன், அடிப்படை வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஜவுளி ஏற்றுமதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தங்களும் (FTA) அமலுக்கு வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் கூடுதல் ஏற்றுமதியை இந்தியா எட்டும் எனத் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் தக்க வைப்பதே தற்போதைய முதன்மை நோக்கம் என இந்திய தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



