சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், அங்கு ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலம் தழுவிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், மத்திய அரசு தமிழகத்திற்கு அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தப் பாதிப்பின் தீவிரம் குறித்தும், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மருத்துவர்கள் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது..?
பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தற்காப்பு நடவடிக்கைகள் :
நோய் பரவலைத் தடுக்கக் கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், ஒரு பண்ணையில் வேலை செய்பவர் மற்றொரு பண்ணைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் பறவைகளோ அல்லது கால்நடைகளோ மர்மமான முறையில் உயிரிழந்தால், அவற்றை திறந்தவெளியில் விடாமல் ஆழமாக புதைக்கவோ அல்லது எரிக்கவோ வேண்டும். மேலும், பொதுமக்கள் இறைச்சியை நன்றாக வேகவைத்து உண்பது மிக அவசியமாகும்.
அறிகுறிகள் என்ன..?
ஒருவேளை மனிதர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், கடும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். பாதிப்பு தீவிரமானால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்படலாம். இந்த நோய்க்கு என தனியாக தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், சாதாரணப் ‘ஃப்ளூ’ காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



