இந்தியாவின் பொது விநியோக திட்டத்தில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய முறையில் ரேஷன் கடைகள் வழியாக வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய நடைமுறையை கொண்டுவர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி மக்கள் பயனடைந்து வரும் நிலையில், இதில் நடக்கும் முறைகேடுகளை களையவே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக, தகுதியற்ற நபர்கள் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் மூலம் அரசு நிதி வீணாவதை தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். கார் வைத்திருப்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் போன்றோர் இந்த இலவச திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுத்து, உண்மையான ஏழைகளுக்குப் பலன் கிடைப்பதை உறுதி செய்ய அரசு முனைகிறது.
இந்த திட்டத்திற்காக ‘இ-ரூபி’ (e-RUPI) என்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட மதிப்பிலான டிஜிட்டல் டோக்கன்கள் அல்லது வவுச்சர்கள் அனுப்பப்படும். ஒரு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படும். இந்த வவுச்சர்களை கொண்டு ரேஷன் கடைகளிலோ அல்லது வெளிச் சந்தையிலோ பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். விருப்பமில்லாதவர்கள் அந்த வவுச்சரை பணமாக மாற்றித் தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது சண்டிகர் மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், வெற்றிபெறும் பட்சத்தில் நடப்பாண்டிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படலாம். இருப்பினும், இதற்கு ரேஷன் கடை விநியோகஸ்தர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “இந்த திட்டம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதோடு, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணம் முறையான உணவுத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுமா அல்லது மது போன்ற தேவையற்ற செலவுகளுக்குச் செல்லுமா?” என்ற அச்சத்தையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.



