உத்தரப்பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் மாமனாரையே மருமகள் கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ராஜ்பர் என்பவரின் கணவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் இல்லாத நேரத்தில் பிங்கிக்கும், ராம்மிலன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களின் ரகசிய தொடர்பை அறிந்த பிங்கியின் மாமனார் சுபச்சன், மருமகளின் நடத்தையை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிங்கி, தனது மாமனாரைப் பழிவாங்கத் துணிந்துள்ளார். தனது காதலன் ராம்மிலனிடம், “என்னுடைய மாமனார் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார்” என பொய் கூறி அவர் மனதைத் தூண்டியுள்ளார் பிங்கி.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு சுபச்சனை ஒரு மது விருந்திற்கு ராம்மிலன் அழைத்துள்ளார். அங்கு ஒரு பாழடைந்த கிணற்றடிக்கு சென்ற அவர்கள், சுபச்சனை நிலைகுலைய வைத்து, அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதை ராம்மிலனும் அவரது நண்பர்களும் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்ததுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி.
மறுநாள் காலை சுபச்சன் சடலமாகக் கண்டெடுக்கப்படவே, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். பிங்கியின் செல்போன் உரையாடல்கள் மற்றும் காதலன் ராம்மிலனின் நடமாட்டத்தை கண்காணித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கொலைக்குக் காரணமான மருமகள் பிங்கி, அவரது காதலன் ராம்மிலன் மற்றும் அவர்களுக்கு உதவிய நண்பர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் செல்போன் வீடியோ ஆகியவற்றை முக்கிய ஆதாரங்களாக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



