தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாத காலம் நடைபெற உள்ளது. இதில், சேர விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு கடந்த ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக வரும் 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.