இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அவசர தேவைக்கோ அல்லது உறவுகளுடன் உரையாடவோ நாம் மேற்கொள்ளும் போன் கால்கள் (Phone Calls), சிக்னல் கோளாறு காரணமாக துண்டிக்கப்படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. குறிப்பாக வீட்டின் உட்புற அறைகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் சிக்னல் கிடைக்காமல் ஜன்னல் ஓரம் தவம் கிடப்பவர்களை நாம் பார்த்திருப்போம். இந்தச் சிக்னல் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு எளிய தொழில்நுட்ப தீர்வு குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக நமது கைபேசிகள் அருகில் உள்ள நெட்வொர்க் கோபுரங்களில் இருந்து சிக்னல்களை பெற்று இயங்குகின்றன. கட்டட அமைப்புகள் அல்லது வானிலை காரணமாக இந்த சிக்னல் வலிமை குறையும்போது, அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவது அல்லது குரல் தெளிவின்றி போவது போன்ற சிக்கல்கள் எழுகின்றன. இத்தகைய சூழலில், உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரு சிறிய வசதியை மட்டும் மாற்றியமைத்தால், சிக்னல் இல்லாத இடத்திலும் உங்களால் ‘HD’ தரத்தில் உரையாட முடியும்.
ஸ்மார்ட்போன்களில் உள்ள ‘வைஃபை காலிங்’ என்ற நவீன அம்சம்தான் இந்தச் சிக்கலுக்குச் சிறந்த தீர்வாகும். உங்கள் போன் செட்டிங்ஸில் சென்று இந்த ஆப்ஷனை மட்டும் ‘ஆன்’ (ON) செய்துவிட்டால் போதும். சிக்னல் குறைவாக இருக்கும் நேரங்களில், உங்கள் ஸ்மார்ட்போன் தானாகவே அருகில் இருக்கும் வைஃபை இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும். இதற்கு உங்கள் சிம் கார்டில் நெட்வொர்க் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; வைஃபை இணையம் இருந்தால் மட்டுமே போதுமானது.
எப்படி செயல்படுகிறது..?
இந்த நுட்பத்தை பயன்படுத்தும்போது, கைபேசி கோபுரங்களுக்கு பதிலாக இணைய அலைவரிசையை (Internet Bandwidth) பயன்படுத்தி அழைப்புகள் பரிமாறப்படுகின்றன. இதனால் சிக்னல் துளியும் இல்லாத பேஸ்மெண்ட்டில் நீங்கள் இருந்தாலும், மிகத்தெளிவான குரலில் உரையாட முடியும். இதற்கு தனியாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. உங்கள் நெட்வொர்க் சேவை வழங்குநரும் (Airtel, Jio, etc.), உங்கள் கைபேசியும் இந்த வசதியை ஆதரிக்கும் பட்சத்தில், இனி நீங்கள் சிக்னல் தேடி ஜன்னல் ஓரம் ஓட வேண்டிய அவசியம் இருக்காது.



