அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா என்பது குறித்த நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் இந்த விவகாரத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் ஏற்பட்டிருந்த குழப்பம், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பின் மூலம் விலகியுள்ளது.
முன்னதாக ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஒரு அமர்வும், சட்டப்படி அது சாத்தியமில்லை என மற்றொரு அமர்வும் தீர்ப்பளித்திருந்தன. இதனால், இது போன்ற வழக்குகள் தனி நீதிபதிகள் முன்பு வரும்போது எதைப் பின்பற்றுவது என்பதில் சிக்கல் நீடித்தது. இந்த முரண்பாட்டை களைய, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரதசக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய முழு அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது, அரசுத் தரப்பு மற்றும் பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
விசாரணையின் போது, மருத்துவக் காரணங்களுக்காக உரிய அரசு அனுமதியுடன் ராஜினாமா செய்பவர்களுக்கும், தகுதியான பணிக்காலத்தை நிறைவு செய்து முறைப்படி ஓய்வு பெறுபவர்களுக்கும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், எவ்வித மருத்துவச் சான்றுகளும் இன்றி, சில ஆண்டுகள் மட்டும் பணிபுரிந்துவிட்டு தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பணியை விட்டு விலகுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்துமா என்பதே பிரதான கேள்வியாக முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், அரசுப் பணி விதிகளின்படி ராஜினாமா என்பது ஒரு ஊழியர் தனது ஓய்வூதிய உரிமையைத் துறப்பதற்கே சமம் என்று தெளிவுபடுத்தினர். அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களைப் பெற தகுதியில்லை. ராஜினாமா செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது அல்ல என்று கூறி, இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான இறுதியான நிலப்பாட்டை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.



