ஆன்மீக சிறப்பு மிக்க திதிகளில் எட்டாவது இடம் பெறும் அஷ்டமி, அண்ட சராசரங்களின் காலத்தை ஆளும் காலபைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். குறிப்பாக, தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதி, சிவபெருமானின் உக்ர வடிவம் ஆன பைரவரை வழிபட மிக உன்னதமான நேரம் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை மனதார வேண்டினால், தீராத பயம் விலகும்; எதிரிகள் தொல்லை மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
இன்றைய நாளின் கூடுதல் விசேஷம் : 2026-ஆம் ஆண்டு தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி, பிப்ரவரி 09-ஆம் தேதி ஆன இன்று திங்கட்கிழமை வந்துள்ளது. சிவ வழிபாட்டிற்கு உரிய திங்கட்கிழமையுடன், முருகப் பெருமானுக்கு உரிய விசாக நட்சத்திரமும் இணைந்து வருவது இந்த நாளுக்கு கூடுதல் ஆன்மீக வலிமை தருகிறது. இன்று காலை 07:06 மணி முதல் தொடங்கிய அஷ்டமி திதி, நாளை காலை 08:46 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக, இன்று நண்பகல் 12:13 முதல் 12:58 வரை உள்ள ‘உச்சிகால’ வேளையில் பைரவரை வழிபடுவது மிக சிறந்த பலன் தரும்.
வழிபாட்டு முறைகள் :
தேய்பிறை அஷ்டமி விரதம் இருப்பவர்கள், இன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். காலபைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து அர்ச்சனை செய்வது புண்ணியம் தரும். மாலை நேரத்தில் அருகில் உள்ள சிவாலயம் சென்று பைரவர் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். மேலும், பைரவர் வாகனம் ஆன நாய்களுக்கு, முக்கியமாக கருப்பு நிற நாய்களுக்கு உணவு அல்லது பால் வழங்குவது கர்ம வினை குறைத்து வாழ்வில் நிம்மதி தரும் எனச் சொல்லப்படுகிறது.
துன்பம் போக்கும் ‘மிளகு தீபம்’ : நீண்ட காலப் பிரச்சனைகள் அல்லது நீதிமன்ற வழக்குகள் மூலம் கஷ்டப்படுபவர்கள் ஒரு எளிய பரிகாரம் செய்யலாம். 11 மிளகுகளை ஒரு சிவப்பு துணியில் சிறு முடிச்சாக கட்டி, அதனை இலுப்பை எண்ணெய் ஊற்றிய பூசணிக்காய் விளக்கில் இட்டு தீபம் ஏற்ற வேண்டும். நெருப்பில் மிளகு வெடிப்பது போல, நம்மை சூழ்ந்த துன்பங்கள் காணாமல் போகும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டை தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமிகள் செய்தால், வேண்டிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.
Read More : திடீர் திருப்பம்..!! திமுகவுக்கு தாவும் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..? அதிர்ச்சியில் இபிஎஸ்..!!



