சென்னை மாநகர பேருந்துகளில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பூ விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்பட அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாறியுள்ளன. தற்போது ரயில் நிலையங்கள், மெட்ரோ உள்ளிட்டவற்றிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் நடைமுறையில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக பேருந்துகளிலும் பயணச்சீட்டு பெற யு.பி.ஐ. வசதியை தமிழ்நாடு அரசு சோதனை முறையில் அமல்படுத்தியுள்ளது.
யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் காா்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கியுள்ளது.
தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இக்கருவி மூலம் காா்டு மற்றும் யுபிஐ, க்யூஆா் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தியுள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் செயல்பாடுகளை பொறுத்து சென்னையில் மற்ற பணிமனைகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.