கலியுக வரதனான முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம் என அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக திகழ்பவர். அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் அந்தத் தண்டாயுதபாணியை தரிசிப்பவர்களுக்குச் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து கிரக கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, தைப்பூச திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு. ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பழனி முருகனை தெய்வமாப் பார்க்காமல், தங்கள் வீட்டு மருமகனாக கருதி 350 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வினோதமான உறவு முறையை பேணி வருகிறார்கள்.
முருகன் எப்படி மருமகனானார்..? சுவாரசியமான வரலாறு :
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ‘ஸ்ரீ பார்வதராஜகுல’ சமூகத்தினர், அன்னை பார்வதி தேவியை தங்கள் குலத்தில் பிறந்த மகளாக கருதுகின்றனர். அந்த அடிப்படையில், பார்வதியின் மகனான முருகப்பெருமான் அவர்களுக்கு மருமகன் முறை ஆகிறார். இதனால், ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் தங்கள் வீட்டு மருமகனுக்குச் சீர் கொண்டு செல்வதை இவர்கள் ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள். சுமார் 366 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்தப் பாதயாத்திரை, தமிழகத்தின் தொன்மையான ஆன்மீக மரபுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
யாருக்கும் கிடைக்காத அனுமதி :
பழனி மலைக் கோவிலில் மற்ற பக்தர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டதும் அனைவரும் கீழே இறங்கிவிட வேண்டும். ஆனால், எடப்பாடி பார்வதராஜகுல மக்களுக்கு மட்டும் ஒரு தனித்துவமான உரிமை பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் காவடி பழனிக்கு செல்லும்போது மலைக் கோவில் வளாகத்திலேயே தங்கி, விடிய விடிய வழிபாடு நடத்தலாம். இவர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக உரிமை வழங்கப்படுகிறது.
தேரையே நகர்த்திய மீனவ மக்கள் :
இந்த சமூகத்தினருக்குப் பழனியில் இவ்வளவு முக்கியத்துவம் கிடைக்க ஒரு வரலாற்றுச் சம்பவமும் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒருமுறை பழனி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தின் போது, திருத்தேர் ஒரு இடத்தில் அப்படியே நின்றுவிட்டது. எத்தனையோ பேர் முயன்றும் நகர மறுத்த அந்தத் தேரை, இறைவனின் அருளாணையால் வந்த பார்வதராஜகுல மீனவ சமூகத்தினர் வடம் பிடித்து இழுக்க, தேர் மிக எளிதாக நகர்ந்தது. இந்த அதிசய சம்பவமே இன்றும் இவர்களுக்குக் கோவிலில் ‘படி பூஜை’ மற்றும் ‘பரிசக் காவடி’ எடுக்கும் உரிமையை நிலைநிறுத்தியுள்ளது.
தற்போது 366-வது ஆண்டாகப் பாதயாத்திரை செல்லும் இந்த மக்கள், சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்துக் கொண்டு சென்று முருகனுக்கு சமர்ப்பிக்கின்றனர். ஒரு தெய்வத்தை உறவுக்காரனாக கருதிப் போற்றும் இவர்களின் பக்தி, தமிழகத்தின் ஆன்மீகப் பெருமைக்குச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
Read More : பெண்களுக்கு மட்டும் 2 குலதெய்வங்கள்..!! எப்படி தெரியுமா..? இப்படி வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..!!



