நாடாளுமன்ற அரசியலில் இருந்து மெல்ல மாநில அரசியலுக்கு தனது கவனத்தை திருப்பி வரும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என தென் மண்டலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தென் மண்டல திமுகவினர் கனிமொழியின் தலைமையின்கீழ் ஓரணியில் திரண்டு வருகின்றனர்.
இந்த சூழலில், முதல்வரின் மருமகன் சபரீசனின் என்ட்ரி கனிமொழிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கனிமொழி ஏற்கனவே கவனித்து வரும் அதே மாவட்டங்களில், சபரீசன் தனது குழுவினருடன் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திப்பது, ரகசியக் கூட்டங்களை நடத்துவது என சபரீசன் காட்டும் வேகம், கனிமொழியின் அதிகார வரம்பிற்குள் அத்துமீறி நுழைவதைப் போல இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
கனிமொழி மிக கவனமாக செதுக்கி வைத்த தென் மண்டல அரசியலில், சபரீசன் தலையிடுவது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட காய் நகர்த்தலா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் மேலிடம் அல்லது முதல்வரின் பச்சைக்கொடி இல்லாமல் இத்தகைய ஆய்வுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால், கனிமொழி திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா என்ற அச்சம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. 2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், திமுக குடும்பத்திற்குள் மூண்டுள்ள இந்த யுத்தம், கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



