பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்கு, சக்கரமும், அவரின் கருணை பொங்கும் முகமும்தான். ஆனால், சிவபெருமானைப் போலவே தனது திருமுடியில் பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டு, பக்தர்களுக்கு அபயமளிக்கும் ஒரு அதிசய திருக்கோலம் தமிழகத்தில் உண்டு.
108 திவ்ய தேசங்களில் 25-வது திருத்தலமாகப் போற்றப்படுவது ‘தலைச்சங்காடு’. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட எண்ணற்ற சங்குகளில், மகாவிஷ்ணுவின் கையில் குடிகொண்டிருக்கும் “பாஞ்சஜன்யம்” என்னும் தலைசிறந்த சங்கு அவதரித்த இடமே இதுவாகும். அதனால்தான் இந்த ஊர் ‘தலைச்சங்காடு’ என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மற்றுமொரு சிறப்பம்சம் சந்திர பகவானோடு தொடர்புடையது. தான் பெற்ற சாபத்தினால் ஒளி இழந்த சந்திர பகவான், இத்தலத்திற்கு வந்து பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தார். சந்திரனின் தவத்திற்கு இரங்கிய எம்பெருமான், அவருக்கு சாப விமோசனம் அளித்ததோடு மட்டுமல்லாமல், சந்திரனையே தனது திருமுடியில் (தலையில்) சூடிக்கொண்டு கௌரவித்தார். இதனால் இத்தலத்து இறைவனுக்கு நாண்மதிய பெருமாள் (சந்திரசாபஹரர்) என்ற திருநாமம் அமைந்தது.
ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால், அவர்களுக்குத் தேவையற்ற மனக்குழப்பம், மன அழுத்தம் மற்றும் தாயாரின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்ற சங்கடங்கள் ஏற்படும். இத்தகைய தோஷங்களால் பாதிக்கப்படுபவர்கள், தலைச்சங்காடு திருக்கோவிலுக்கு வந்து, அங்குள்ள ‘சந்திர புஷ்கரணி’ தீர்த்தத்தில் நீராடி, நாண்மதியப் பெருமாளை தரிசித்தால் சந்திர தோஷம் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலில், மூலவராக நாண்மதிய பெருமாளும், தாயாராக தலைச்சங்க நாச்சியார் (செங்கமலவல்லி) என்பவரும் அருள் பாலித்து வருகிறார்கள். வாழ்வின் குழப்பங்கள் நீங்கி, மன அமைதி பெற விரும்புவோர் ஒருமுறையாவது இத்தலத்திற்கு சென்று அந்தத் திவ்யக் கோலத்தை தரிசிப்பது அவசியமாகும்.
Read More : குலதெய்வம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டுமா..? அப்படினா மறக்காமல் இதை பண்ணுங்க..!!



