தென் ஆசியாவில் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 37-வது அறிக்கையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த தாக்குதலில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
ஒரு ஐநா உறுப்பு நாடு, அந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுஅமைப்பே பொறுப்பு எனக் கூறியதாக ஐநாவுக்கு தகவல் வழங்கியுள்ளது. இதன் மூலம், டெல்லி தாக்குதலின் பின்னணியில் அந்த அமைப்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு, அக்டோபர் 8-ஆம் தேதி, ஜெய்ஷ்-இ-மொஹம்மது தலைவர் மசூத் அசார், அந்த அமைப்பிற்காக “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெயரில் தனியான பெண்கள் பிரிவை தொடங்கியதாக அறிவித்திருந்தார். இந்த பிரிவு தற்போது ஐநா தடை பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஐநா அறிக்கை, ஜெய்ஷ்-இ-முகமதுஅமைப்பின் தற்போதைய நிலை குறித்து உறுப்புநாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. ஒரு நாடு அந்த அமைப்பு இன்னும் செயல்பாட்டிலுள்ளதாக கூறும் நிலையில், மற்றொரு நாடு அது தற்போது “செயலற்றதாக” மாறிவிட்டதாக தெரிவிக்கிறது. இதற்கிடையில், ஐநா தடைகள் விதிக்கப்பட்ட பின்னர் ஜெய்ஷ்-இ-மொஹம்மதும், லஷ்கர்-இ-தொய்பாவும் இனி செயல்படவில்லை என்று பாகிஸ்தான் முன்பே கூறி வந்துள்ளது.
மேலும், 2025 ஏப்ரலில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் குறித்தும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பாக கருதப்படும் “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” நடத்தியதாக கூறப்படுகிறது.
டெல்லி வெடிகுண்டு தாக்குதல் விவரம்:
நவம்பர் 10-ஆம் தேதி மாலை, லால் குவிலா மெட்ரோ நிலையம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த ஹ்யூண்டாய் i20 காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால், அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆரம்ப விசாரணையில், இந்த சம்பவம் பாரிதாபாதில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பலரை போலீஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பொறுப்பானதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாத வலையமைப்பை முழுமையாக கண்டறிந்து ஒழிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Read More : அதிக ஊழல் நிறைந்த நாடுகள் எவை? 2025 ஆம் ஆண்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?



