தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் தவெக கட்சி பாடலை அக்கட்சியை சேர்ந்த ஒருவர் ஒலிக்கவிட்டுள்ளார்.. பழனி முருகன் கோவிலுக்கு தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.. அந்த வகையில் பக்தர்கள் வரும் படிப்பாதையில் பக்தர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வழங்குவதற்காக ஸ்பீக்கர் வைக்கப்பட்டுள்ளது..
100-க்கும் அதிகமான ஒலிப் பெருக்கிகள் பழனி மலைக்கோவில், கிரிவலப் பாதை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது.. இந்த ஸ்பீக்கரில் பக்தர்கள் தவறவிடும் பொருட்கள், கூட்டத்தில் குழந்தைகளை தவறவிட்டால் அது தொடர்பான அறிவிப்பு போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில் பழனி மலைக் கோயிலுக்கு சென்ற தவெக தொண்டர் ஒருவர், படிப்பாதையில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரில் தனது செல்போனை இணைத்து தவெக கட்சியின் ‘ உங்க விஜய் உங்க விஜய்’ என்ற பாடலை ஒலிக்க வைத்துள்ளார். இதனால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்..
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த வீடியோவை பார்த்த பலரும், கோவிலுக்கு மன நிம்மதியை தேடி வரும் பக்தர்களுக்கு இதுபோன்று இடையூறுகளை ஏற்படுத்துவது கடுமையாக கண்டிக்க வேண்டியது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. பழனி முருகன் கோயிலில் தவெக பாடல் ஒலிக்கப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Read More : விஜய்க்கு அடுத்த சிக்கல்.. தேர்தல் நேரத்தில் புதிய நெருக்கடி..! எப்படி சமாளிக்கப் போகிறார்..?



