தமிழக தேர்தல் வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தால், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டு ‘சென்னை மாகாணம்’ சந்தித்த முதல் தேர்தல் இது என்பதுதான் இதன் வரலாற்றுச் சிறப்பு. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுடன் இருந்த பகுதிகள் பிரிந்து சென்றதால், சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 375-லிருந்து 205-ஆக குறைந்து, தமிழக அரசியல் களம் ஒரு புதிய வடிவத்தை பெற்றது.
அக்காலகட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தனது மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்தித்தது. குறிப்பாக, ஏழை மாணவர்களுக்காக அவர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதே சமயம், உதயமான சில ஆண்டுகளிலேயே திமுக தேர்தல் அரசியலில் குதித்தது. எனினும், அப்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால், அண்ணா தலைமையிலான திமுக வேட்பாளர்கள் உதயசூரியன், சேவல் போன்ற பல்வேறு சுயேச்சை சின்னங்களிலேயே 124 இடங்களில் களம் கண்டனர்.
இத்தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியிலும், அண்ணா காஞ்சிபுரத்திலும் போட்டியிட்டனர். முதன்முறையாக கருணாநிதி குளித்தலையிலும், அன்பழகன் எழும்பூரிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் தனது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டது என்றால், திமுகவோ “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தின் மூலம் மாநில சுயாட்சி மற்றும் சமூகநீதி கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.
இதற்கிடையே, காங்கிரஸில் இருந்து விலகியிருந்த ராஜாஜி, காமராஜருக்கு எதிராக ‘காங்கிரஸ் சீர்திருத்தக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி ஒரு அணியை களமிறக்கியது தேர்தலை மும்முனைப் போட்டியாக மாற்றியது. இறுதியாக மார்ச் 31-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், காமராஜரின் தலைமைக்கு மக்கள் அளித்த பெரும் அங்கீகாரமாக அமைந்தது. காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்தது. சுயேச்சைகளாக போட்டியிட்ட திமுகவினர் 15 இடங்களில் வென்று சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக காலடி எடுத்து வைத்தனர்.
ராஜாஜியின் ஆதரவு பெற்ற சீர்திருத்தக் குழுவினர் 26 இடங்களை பிடித்த நிலையில், முந்தைய தேர்தலில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 4 இடங்களுடன் பின்னடைவை சந்தித்தது. மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற காமராஜரின் அமைச்சரவையில் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், கக்கன் போன்ற ஆளுமைகள் இடம்பெற்று தமிழகத்தின் பொற்கால ஆட்சியை தொடர்ந்தனர்.



