தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் சிறப்பு குறைதீர் முகாம் இன்று (பிப்ரவரி 14, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம், பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் புதிய உறுப்பினர்களின் பெயர்களை சேர்ப்பது அல்லது தேவையற்ற பெயர்களை நீக்குவது போன்ற பணிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். மேலும், வீட்டு முகவரி மாற்றம், தவறான செல்போன் எண்ணைத் திருத்துதல் அல்லது புதிய எண்ணைப் பதிவு செய்தல் போன்ற சேவைகளையும் இந்த முகாமிலேயே நேரடியாக செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்வது மட்டுமின்றி, நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களையும் இந்த முகாமில் தெரிவிக்கலாம். குறிப்பாக, கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறைவாக இருப்பது அல்லது பொருட்கள் விநியோகத்தில் ஊழியர்கள் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் முறையிடலாம். பெறப்படும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் மற்றும் நேரடி உதவி தேவைப்படும் முதியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று இந்த மக்கள் குறைதீர் முகாமின் பலனைப் பெற்றுக்கொள்ளலாம்.
Read More : 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 வேண்டுமா..? மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



